9 பேரிடம் நகை-பணம் பறித்த வாலிபர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் 9 பேரிடம் நகை-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, புவனகிரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து பணம் எடுத்து செல்லும் பெண்கள் மற்றும் முதியோர்களை குறிவைத்து, அவர்களை பின்தொடர்ந்து சென்று வாலிபர் ஒருவர் பணம் பறித்து வந்தார்.
இந்த வாலிபரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், செல்வப்பாண்டியன் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் செட்டி தெருவில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் அவர், அரியலூர் மாவட்டம் சின்னவளையம் ரோட்டு தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் ஜோதிபாசு(வயது 31) என்பதும், ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுத்து வந்த 8 பேரிடம் இருந்து பணம் பறித்ததும், ஓமாம்புலியூர் கிராமத்தை சோந்த ராஜாராமன் என்பவரிடம் 5 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story