நெல்லையில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்


நெல்லையில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 4 Sep 2021 8:35 PM GMT (Updated: 4 Sep 2021 8:35 PM GMT)

ிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாக உள்ளது.

நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து விழாக்களும் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடத்தப்படுகிறது.
அதேபோன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்தும், பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே எளிமையாக நடத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

சிலைகள் விற்பனை மந்தம்

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஒரு அடி முதல் பல அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களிலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஏராளமானவர்கள் தங்களது வீடுகளிலும் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இதையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டாவது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், நெல்லையில் ஏராளமான தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தனர். ஆனால் தற்போது பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை என்பதால், விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. சிலர் தங்களது வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய விநாயகர் சிலைகளையே வாங்கி செல்கின்றனர். இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

Next Story