துப்பாக்கி சுடும் போட்டியில்போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சாம்பியன்
துப்பாக்கி சுடும் போட்டியில்போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சாம்பியன்
சேலம், செப்.5-
சேலம் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சாம்பியன்பட்டம் வென்றார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
சேலம் சரகத்திற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் ஏற்காடு அடிவாரத்தில் இருந்தது. அங்கு போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. ஆனால் சமீபகாலமாக ஏற்காடு அடிவாரம் பகுதியில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சேலத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வேறு இடங்கள் ஆய்வு செய்து வந்தநிலையில், நகரமலை அடிவாரம் பகுதியில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தனியார் பங்களிப்புடன் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக நகரமலை அடிவாரம் பகுதியில் 100 மீட்டர் அளவுக்கு மலையை குடைந்து அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு
இந்நிலையில், சேலம் சரகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபினவ் (சேலம்), சரோஜ்குமார் தாகூர் (நாமக்கல்), கலைச்செல்வன் (தர்மபுரி), சாய்சரண் தேஜஸ்வி (கிருஷ்ணகிரி), போச்சம்பள்ளி பட்டாலியன் கமாண்டோ பிரிவு சூப்பிரண்டு பாண்டியராஜன், தமிழ்நாடு காவல்துறை கமாண்டோ பிரிவு கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் பங்கேற்று இலக்கை நோக்கி குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டனர்.
சாம்பியன்
இந்த போட்டியில், 30 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரத்திற்கான பிரிவில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று முதல் பரிசை தட்டி சென்றார். இவர், 326 புள்ளிகள்பெற்றிருந்தார்.
இதேபோல், கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜேஸ்வி 321 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா 298 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பரிசுகள்
முடிவில், முதல் மூன்று இடங்களை பிடித்த அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் கும்மராஜா, உதவி கமிஷனர்கள் நாகராஜன், பூபதிராஜா, ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் காவல்துறையில் அனைத்து நிலையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மாதம் தோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story