ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சேலத்தில் ஆலோசனை


ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சேலத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Sept 2021 2:15 AM IST (Updated: 5 Sept 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சேலத்தில் ஆலோசனை

சேலம், செப்.5-
நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து சேலத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து கார் மூலமாக நேற்று அதிகாலை சேலம் வந்த அவரை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வரவேற்றார். 
இதேபோல், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா ஆகியோர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து சங்ககிரிக்கு சென்ற அவர், அங்கு கோர்ட்டு வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு சங்ககிரி சார்பு நீதிபதி உமாமகேஸ்வரி தலைமைதாங்கினார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி ராதாகிருஷ்ணன், சங்ககிரி குற்றவியல் நீதிபதி சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். 
2,500 புத்தகங்கள்
இந்த விழாவில் சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், தாசில்தார் பானுமதி, சங்ககிரி வக்கீல் சங்க தலைவர் மோகன்பிரபு, வக்கீல்கள் சண்முகசுந்தரம், கிறிஸ்டோபர், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்த சட்ட நூலகத்துக்கு 2 ஆயிரத்து 500 சட்ட புத்தகங்கள் உள்ளன. இதில் 1921-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான குற்றவியல், உரிமையியல் சட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை
பின்னர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சேலம் அஸ்தம்பட்டி கோர்ட்டு வளாகத்திற்கு மதியம் 1 மணியளவில் வந்தார். அங்கு மரக்கன்றுகளை நட்டார். இதையடுத்து அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 
சேலம் மாவட்டத்தில் தேங்கி உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து நீதிபதிகளுடன் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார்.

Next Story