பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை


பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2021 2:15 AM IST (Updated: 5 Sept 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

கடலூர், 

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக வீடுகளில் சிறிய வகை சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை கடலூர் மாவட்டத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு வழிகாட்டுதல் படி கொண்டாட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் பாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய பிரமுகர்கள், சிலை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சிலையை வைத்து ஊர்வலமாகவும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் நீதிமோகன், நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை தாசில்தார் சிவக்குமார் பேசுகையில், அரசின் உத்தரவின்படி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் அவரவர் சொந்த இடத்தில் விநாயகர் மண் சிலை வைத்துக் கொண்டு வழிபாடு நடத்த வேண்டும், மேலும் அருகில் உள்ள நீர்நிலைகளில் தனி நபர்களாக சென்று விநாயகர் சிலைகளை கரைத்து கொள்ளலாம் என்றார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரம் தாசில்தார் ஆனந்த், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் குணபாலன், தாலுகா இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள், இந்து முன்னணியினர், சிதம்பரம், அண்ணாமலை நகர், தாலுகா உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் பேசுகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பது போன்ற நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்றார். 
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், சுரேஷ் முருகன், மகேந்திரன், ஆனந்தகுமார், தியாகராஜன், உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், உளவுப்பிரிவு காவலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணாமலை தலைமை காவலர் சிவபெருமான், கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் பாடினார்.

Next Story