பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்


பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:26 AM IST (Updated: 5 Sept 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

கடலூர், 

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 50). நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் வெளியில் உள்ள சிமெண்டு கட்டையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த ஜெயலட்சுமி, தாலி சங்கலியை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். 

கைது

இதற்கிடையே ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அவரது மகன், மகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ருட்டி தட்டாம்பாளையம் காலனியை சேர்ந்த கார்கோன் மகன் அறிவழகன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story