சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
மீன்சுருட்டி கடைவீதியில் வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
மீன்சுருட்டி:
வடிகால் வாய்க்கால் அமைக்கவில்லை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து நடந்து வரும் நான்கு வழிச்சாலை பணியில், 100 அடி சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து வருகின்றனர்.
மீன்சுருட்டி கடைவீதிகளில் இருபுறமும் 75 அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.
குளம்போல் தேங்கியது
இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் குளம்போல் தேங்கி காட்சி அளித்தது. மேலும் இருபுறமும் தேங்கிய மழைநீர், இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் சாலையில் மழைநீர் வழிந்து ஓடி விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கோரிக்கை
தரைக்கடை பகுதியில் தண்ணீர் கடல்போல் சூழ்ந்து இருந்தது. இதனால் கடைவீதிக்கு பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழிச்சாலை அமைக்கும் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்காலை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story