வாழை இலையில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருமானூர் அருகே, நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி சாலையோரத்தில் வாழை இலையில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
நெல்மணிகள் முளைக்கும் சூழல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை கொள்முதல் செய்ய எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வயல்களில் கொட்டி வைத்துள்ளனர். மேலும் பல விவசாயிகள் நெல் மூட்டைகளை வீடுகளிலும், தெருக்களிலும் வைத்துள்ளனர். சில பகுதிகளில் நெல்மணிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில், நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கும் சூழலும் உள்ளது.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி குருவாடி மாரியம்மன் கோவில் அருகில், சாலையோரத்தில் வாழை இலையில் நெல்லை கொட்டியும், வீட்டு உபயோக பாத்திரங்களில் நெல்லை கொட்டியும் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊரில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிடம் விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுவது குறித்த கோரிக்கை மனு பெறப்பட்டது. அந்த மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து, கலெக்டர் பரிந்துரையின்பேரில் விரைவில் குருவாடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story