கோடநாடு எஸ்டேட்டில் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் ஆய்வு
கோடநாடு எஸ்டேட்டில் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் ஆய்வு நடத்தியதால், வழக்கு விசாரணை சூடுபிடித்து வருகிறது.
கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட்டில் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் ஆய்வு நடத்தியதால், வழக்கு விசாரணை சூடுபிடித்து வருகிறது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோடநாடு வழக்கில் நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுபவர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறது.
எஸ்டேட்டில் ஆய்வு
இந்த நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
பின்னர் மாலையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டுக்கு நேரில் சென்று கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ் குறித்து, அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் வழக்கு விசாரணை சூடுபிடித்து உள்ளது.
Related Tags :
Next Story