சங்கர் யானை கும்கியாக மாற்றப்படுகிறது


சங்கர் யானை கும்கியாக மாற்றப்படுகிறது
x
தினத்தந்தி 5 Sept 2021 3:07 AM IST (Updated: 5 Sept 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் 3 பேரை கொன்ற சங்கர் யானை கும்கியாக மாற்றப் படுகிறது. அதற்கு வாகனங்களை கண்டு மிரள்வதை தடுக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூடலூர்

சேரம்பாடியில் 3 பேரை கொன்ற சங்கர் யானை கும்கியாக மாற்றப் படுகிறது. அதற்கு வாகனங்களை கண்டு மிரள்வதை தடுக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

3 பேரை கொன்ற யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கும்கியாக மாற்றப்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு சேரம்பாடி பகுதியில் 3 பேரை மிதித்து கொன்ற சங்கர் என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வரப்பட்டது. 

பின்னர் அபயாரண்யம் முகாமில் உள்ள மர கூண்டில் அடைத்து, தொடர்ந்து 90 நாட்கள் பராமரித்து வந்தனர். ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்த சங்கர் யானை, நாளடைவில் சாதுவாக மாறியது. மேலும் பாகன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதனால் வனத்துறையினர் மரக்கூண்டில் இருந்து சங்கர் யானையை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகள் தொடங்கப்படவில்லை. எனினும் தினமும் வனப்பகுதிக்கு சென்று தனக்கு தேவையான பசுந்தீவனங்களை எடுத்து கொள்ள பழகியது.

மிரள்வதை தடுக்க பயிற்சி

இந்த நிலையில் மனிதர்கள் மற்றும் வாகனங்களை கண்டால் சங்கர் யானை மிரண்டு வருகிறது. இதற்காக சில சிறப்பு பயிற்சிகளை பாகன்கள் அளித்து வருகின்றனர். அதன்படி சாலையில் செல்லும் வாகனங்களை கண்டு மிரள்வதை தடுக்க தினமும் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் சங்கர் யானையை பாகன்கள் கட்டி வைக்கின்றனர். 

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்டு மிரள்வது படிப்படியாக குறையும்.
இதுகுறித்து பாகன்கள் கூறும்போது, இயற்கையான சூழலில் வளர்ந்த காட்டுயானை மனிதர்கள் வாழும் சூழலுக்கு மாற தொடக்கத்தில் சிறிய பயிற்சிகள் அளிக்கப்படும். தற்போது வாகனங்களை கண்டால் மிரள்வதை தடுக்க சாலையோரம் நிறுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  
பின்னர் உயர் அதிகாரிகளின் அனுமதிக்கு பிறகு கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படும் என்றனர்.


Next Story