மலைரெயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்


மலைரெயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Sept 2021 3:07 AM IST (Updated: 5 Sept 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் மலைரெயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர்

குன்னூரில் மலைரெயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலைரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது. மலைரெயில் பாதையில் கல்லார் முதல் குன்னூர் வரை பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சீரமைக்கும் பணி

இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மலைரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால், நாளை(திங்கட்கிழமை) முதல் மலைரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

இதையொட்டி மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர குன்னூர் ரெயில்வே பணிமனையில் உள்ள நீராவி என்ஜின்கள், டீசல் என்ஜின்கள் மற்றும் மலைரெயில் பெட்டிகளை பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருகை அதிகரிக்கும்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மூடப்பட்ட சுற்றுலா தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் மலைரெயிலில் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.

இதனால் மீண்டும் மலைரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story