பராமரிப்பின்றி கிடக்கும் வாகன நிறுத்துமிடம்
ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் வாகன நிறுத்துமிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் வாகன நிறுத்துமிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர்.
இதில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்பட கடைகளுக்கு வருபவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். அவர்கள் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காண ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் 4 ஏக்கர் இடத்தை வாகன நிறுத்துமிடத்துக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு நகராட்சி மூலம் கட்டணமின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
குண்டும், குழியுமாக...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டும், குழியுமாக இருந்த அந்த இடம் மணல் கொட்டி சமன்படுத்தப்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் சென்று வருவதால் மீண்டும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி வந்து அருந்தி வாகன நிறுத்துமிடத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். மதுபானங்களை அருந்தி விட்டு காலி பாட்டில்களை தூக்கி வீசி செல்கின்றனர்
தொடர் மழையால் வாகன நிறுத்துமிடத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் மைதானத்தை பராமரிக்காததால் ஆங்காங்கே புதர் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து இருக்கிறது. கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஆங்காங்கே குவியல், குவியலாக கிடக்கிறது. இதனால் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இன்டர்லாக் கற்கள்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் குதிரை பந்தய மைதான வாகன நிறுத்துமிடத்தில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த இடவசதி உள்ளது.
மைதானத்தை சமன்படுத்த நடவடிக்கை எடுக்காததாலும், பராமரிப்பு பணி செய்யாததாலும் சில வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, லோயர் பஜார் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க வாகன நிறுத்தும் இடத்தை சமன் செய்து இன்டர்லாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story