சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி தேங்கும் மழைநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி தேங்கும் மழைநீரில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி தேங்கும் மழைநீரில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாற்று நடும் போராட்டம்
நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி வன்னியர் தெரு மேல்வீதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் மழைநீர் வீடுகள், சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் தேங்கி நிற்கும் மழைநீரில் நாற்று நட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது பெண்கள் கூறுகையில், இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவுகிறது. இதனால் சாலையை சீர்செய்து, சாக்கடை கால்வாய் வசதி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். தேங்கும் மழைநீரில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
---=======
Related Tags :
Next Story