பெங்களூருவில் 15 சதவீத தமிழர்கள் வசிக்கிறார்கள்- ஆய்வில் தகவல்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 106 மொழியின மக்கள் வசிப்பது தெரியவந்துள்ளது. தமிழர்கள் 15 சதவீதம் பேர் வசிப்பது பற்றியும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
106 மொழிகள் பேசும் மக்கள்
கர்நாடக தலைநகர் பெங்களூரு பூங்கா நகரம், தகவல் தொழில் நுட்ப நகரம் என பல்வேறு புனைப்பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. பெங்களூருவில் இந்தியாவின் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். ஏற்கனவே மக்கள் வாழ தகுதியான நகரங்களில் பெங்களூருவுக்கு சிறப்பு இடமும் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு நகரில் வசிக்கும் மக்கள் பேசும் மொழிகள் குறித்து டெல்லியை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்தி இருந்தது.
அதாவது 2011-ம் ஆண்டில் பெங்களூரு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த கணக்கெடுப்பை அந்த நிறுவனம் நடத்தி இருந்தது. அதில், பெங்களூருவில் 106 மொழிகள் பேசும் மக்கள் வசித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு நகரம் அனைத்து மொழிகளும் பேசும் மக்கள் வாழ்வதற்கான சிறந்தது என்ற மற்றொரு பெருமையும் கிடைத்திருக்கிறது.
தமிழர்கள் 15 சதவீதம்
பெங்களூருவில் 106 மொழியின மக்கள் வசித்து வந்தாலும், முதலாவதாக தாய் மொழியான கன்னடம் பேசும் மக்கள் 44.5 சதவீதம் பேரும், இதற்கு அடுத்தபடியாக தமிழர்கள் தான் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் தமிழர்கள் 15 சதவீதம் பேர் வசித்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தெலுங்கு மொழி பேசும் நபர்கள் 14 சதவீதமும், 12 சதவீதம் பேர் உருது மொழி பேசுபவர்களும், 3 சதவீதம் பேர் மலையாளிகள் என்றும், பிற மொழிகளை பேசுபவர்கள் 6 சதவீதம் இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பெங்களூருவில் கன்னடர்களுக்கு அடுத்ததாக தமிழர்களே பெருமளவு வசிப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிக மொழிகள் (106) பேசும் மக்கள் வசிக்கும் நகரம் பெங்களூருவுக்கு முதலிடமும், இதற்கு அடுத்தபடியாக நாகலாந்தின் திமாப்பூரில் 103 மொழிகள் பேசுபவர்களும், அசாம் மாநிலம் சோனித்பூரில் 101 மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதும் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story