வாகன உதிரிபாக விற்பனை கடை உரிமையாளர் கொலை


வாகன உதிரிபாக விற்பனை கடை உரிமையாளர் கொலை
x
தினத்தந்தி 5 Sept 2021 3:18 AM IST (Updated: 5 Sept 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் அருகே, கண்ணில் மிளகாய் பொடி தூவி வாகன உதிரிபாக விற்பனை கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

ராய்ச்சூர்:

ஆயுதங்களால் தாக்கி கொலை

  ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ஹட்டி டவுனை சேர்ந்தவர் ஹனீப்(வயது 30). இவர் வாகனங்களின் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஹனீப் தனது மோட்டார் சைக்கிளில் ஹட்டி பஸ் நிலைய பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஹனீப்பின் மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள், ஹனீப்பிடம் தகராறு செய்தனர். மேலும் அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவினர்.

  இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் ஹனீப் அலறினார். இந்த சந்தர்ப்பத்தில் மர்மநபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஹனீப்பை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த ஹனீப் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

முன்விரோதம் காரணமா?

  இந்த கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஹட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ஹனீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். ஆனாலும் ஹனீப்பை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை.

  ஹனீப்புக்கும், வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளில் வேலை செய்து வரும் சில மெக்கானிக்குகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதன்காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

  இந்த கொலை சம்பவம் குறித்து ஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹனீப்பை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story