பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு


பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 5 Sep 2021 4:45 AM GMT (Updated: 2021-09-05T10:15:55+05:30)

பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், பெரியபட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவருடைய மனைவி அமீனா (28). இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கார்த்திக், ஆந்திராவில் வேலை செய்து வருகிறார். வேலப்பன்சாவடியில் உள்ள கார் ஷோரூமில் வேலை செய்து வந்த அமீனா, 10 நாட்களுக்கு ஒருமுறை ஆந்திராவுக்கு சென்றுவிட்டு வருவது வழக்கம்.

கடந்த 2 நாட்களாக அமீனா வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதினர்.

பிணமாக கிடந்தார்

இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூட்டிய வீட்டுக்குள் கட்டிலில் அமீனா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

அமீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக்குறைவாக இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அமீனாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Next Story