காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sep 2021 5:56 AM GMT (Updated: 5 Sep 2021 5:56 AM GMT)

காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம்,

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி குத்துவிளக்கு ஏற்றி, விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து இட்டு, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1 முதல் 30 வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில் மரம் நடுதல், 2-வது வாரத்தில் ஊட்டச்சத்திற்கான யோகா மற்றும் ஆயுஷ் நிகழ்ச்சிகள், 3-வது வாரத்தில் அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குதல் மற்றும் 4-வது வாரத்தில் மிகவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிதல் மற்றும் சமுதாய தோட்டங்கள் அமைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட கலெக்டரால் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பேரணி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 100 அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முதல் காந்திரோடு நேரடி வரை ஊர்வலம் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் க.சற்குணா, உணவு பாதுகாப்பு அலுவலர் அமுதா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

கல்பாக்கம்

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளம், உமா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் கருவூல அலுவலர் லெனின், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்-கணக்கு) லதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். குழந்தைகள் திட்டப்பணி மேற்பார்வையாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரம், காய்கனிகள் மற்றும் மரக்கன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Next Story