அடைமொழியை நீக்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்


அடைமொழியை நீக்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்
x
தினத்தந்தி 5 Sept 2021 10:07 PM IST (Updated: 5 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடந்த விழாவில் கல்வியில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம் என்கிற அடைமொழியை நீக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று கலெக்டர் மோகன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தினத்தை யொட்டி பள்ளி கல்வித்துறை 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மோகன்,  ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், பரிசு ஆகியவற்றை வழங்கினர். 
 இந்த விருது கெடார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமாள், கம்ப்யூட்டர் பயிற்றுனர் ஆசிரியர் குரு, மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன், அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவபாலன், வாணியம்பாளையம் ஆனந்தா நிதியுதவி நடுநிலைப்பள்ளி ஆசிரியை சரசு, ஆனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை மாலினிதேவி, கிளியனூர் ஆசிரியர் லட்சுமி ரேகா, செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அப்ரோஸ் கான், ஆகிய 9 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 
விழாவில் கலெக்டர் மோகன் பேசியதாவது:- நமது மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை பாராட்டி விருதுகள் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து  சில அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவ-மாணவிகளிடம், நீங்கள் பள்ளிக்கு வருவதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டேன்.

முதன்மை மாவட்டம்

 அப்போது மாணவர்கள் பலர் நாங்கள் எங்களின் ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினர். மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் வைத்திருக்கக்கூடிய அன்பையும் மரியாதையையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
நமது மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முதன்மையான மாவட்டமாக திகழ மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகிறது. கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்கிற அடைமொழியை நீக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். புதிய யுக்திகளை பயன்படுத்தி மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தி அதன் மூலம் அவர்களை வெற்றியாளராக சமூகத்திற்கு வழங்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

கொரோனா நிவாரண நிதி

 அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொரோனா நிவாரண நிதியாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கான காசோலையை கலெக்டர் மோகனிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story