தீக்குளித்த தொழிலாளி சாவு


தீக்குளித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 Sep 2021 5:02 PM GMT (Updated: 5 Sep 2021 5:02 PM GMT)

கம்பத்தில் கட்சி கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கம்பம்: 

கம்பம் ஏகலூத்து சாலை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கொடியை அவர் ஏற்ற முயன்றார். 

இந்த பிரச்சினை தொடர்பாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அந்த கொடிக்கம்பம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு சொந்தமானது என்று போலீசார் கூறி சென்றனர்.

 இதனால் மனமுடைந்த அவர், கடந்த மாதம் 31-ந்தேதி கொடிக்கம்பம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தீக்குளித்து உயிரிழந்த சிலம்பரசனின் மனைவி ராஜேஸ்வரி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி மற்றும் பலர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம், ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். 

அதில், "ராஜேஸ்வரி, தனது கணவர் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும். கணவர் சாவுக்கு காரணமான போலீஸ் அதிகாரி உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நிவாரணம் மற்றும் தனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Related Tags :
Next Story