நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை


நடுக்கடலில் நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 5 Sept 2021 10:47 PM IST (Updated: 5 Sept 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகப்பட்டினம்:
நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது 28), காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் (55), தெற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன், செல்வம் (18) ஆகிய 4 பேர் ஒரு பைபர் படகிலும், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு (40) சொந்தமான பைபர் படகில் அவரும், அமர்நாத் (45), அகிலன் (20) ஆகிய 3 பேர் என மொத்தம் 7  மீனவர்கள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள்  மாலை 5 மணி அளவில் கோடியக்கரை தென் கிழக்கில் 12 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டையால் நாகை மீனவர்களை தாக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு வாக்கிடாக்கி, வலைகள் ஆகியவற்றை பறித்து சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம்  இருக்கும் என கூறப்படுகிறது.
3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்த தாக்குதலில் ரவீந்திரன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். காயமடைந்த 3 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
கொள்ளையடிக்க முயற்சி
இதேபோல வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (34), கார்த்தி (36), சச்சிதானந்தம் (63) ஆகிய 4 மீனவர்களும் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை வழிமறித்தனர். பின்னர் கடற்கொள்ளையர்களில் ஒருவன் கத்தியோடு படகில் ஏறி மீனவர்களை மிரட்டி பொருட்களை கொள்ளையடிக்க முயன்றான். இதை மீனவர் கார்த்தி தடுக்க முயன்ற போது இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கடற்கொள்ளையன் தான் வைத்திருந்த கத்தியால் கார்த்தியின் கையில் வெட்டினான்.
காலில் காயம்
பின்னர் இருவரும் மோதிக் கொண்டு படகில் இருந்து கடலில் குதித்த போது படகு எந்திரத்தில் உள்ள விசிறியில் கார்த்தியின் கால் சிக்கிகாயம் ஏற்பட்டது.  இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற பிறகு  சக மீனவர்கள் கார்த்தியை மீட்டு கரை திரும்பினர். பின்பு கார்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகள் விவரங்கள் சேகரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். 
 அட்டூழியம்
கடந்த 1-ந் தேதி நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கி  ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், 3-ந் தேதி அதே பகுதி மீனவா்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான வலைகளையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று முன்தினம் 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள், நாகை மீனவர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர். 
தமிழக மீனவர்கள் தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்து செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story