கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த காற்றுடன் திடீர் மழை


கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த காற்றுடன் திடீர் மழை
x
தினத்தந்தி 5 Sep 2021 5:18 PM GMT (Updated: 2021-09-05T22:48:11+05:30)

கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது சாலையின் குறுக்கே பழமையான புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது


கள்ளக்குறிச்சி

காற்றுடன் மழை

கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் 3 மணிஅளவில்  வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் 3.45 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் சென்ற பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க சாலையோரம் உள்ள கடைகளில் ஒதுங்கினர். 

மழையின் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. மதியம் 3.45 மணி முதல் மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. 

புளியமரம் சாய்ந்தது

காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கள்ளக்குறிச்சி-சேலம் சாலையில் ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே நின்ற பழமை வாய்ந்த புளியமரம் சாலையின் குறுக்கே  விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக மரம் சாய்ந்தபோது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வந்து செல்லவில்லை. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக ஏமப்பேர் புறவழிச்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
கள்ளக்குறிச்சி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதியான சின்னசேலம், கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.


Related Tags :
Next Story