உளுந்தூர்பேட்டை அருகே மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை தொழிலாளி கைது


உளுந்தூர்பேட்டை அருகே  மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை  தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Sep 2021 5:26 PM GMT (Updated: 2021-09-05T22:56:30+05:30)

உளுந்தூர்பேட்டை அருகே மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

உளுந்தூர்பேட்டை

கள்ளத்தொடர்பு

அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து(வயது 40) தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி(35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாலதிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனந்தல் பகுதியை சேர்ந்த வேலு(42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மாலதி வீட்டை விட்டு வெளியேறி வேலுவுடன் செம்மனந்தல் கிராமத்தில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதற்கிடையே மனைவியை பார்ப்பதற்காக பிச்சைமுத்து நேற்று குழுமூரில் இருந்து தனது 2 மகன்களுடன் செம்மனந்தல் கிராமத்துக்கு வந்தார். அங்கு மனைவியை பார்த்த பின்னர் அவர் மகன்களுடன் ஊருக்கு புறப்பட்டார். அப்போது வழியில் பரிக்கல் அருகே வேலுவை பிச்சைமுத்து சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். 
போதை தலைக்கு ஏறியதும் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிச்சைமுத்து அருகில் இருந்த விறகு கட்டையால் வேலுவை சரமாரியாக தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிச்சைமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

தொழிலாளி கைது

இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலையுண்ட வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேலுவை கொலை செய்த பிச்சைமுத்து பரிக்கல் கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் நோக்கி தப்பிச் செல்ல முயன்றபோது அவரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மனைவியின் கள்ளக்காதலனை தொழிலாளி அடித்து கொன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story