எலச்சிபாளையத்தில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம்; மாதர் சங்கம் சார்பில் நடந்தது
எலச்சிபாளையத்தில் மாதர் சங்கம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது.
எலச்சிபாளையம்:
போராட்டம்
கடந்த 1-ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.900-க்கு மேல் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் மாதர் சங்கம் சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது. இதற்கு எலச்சிபாளையம் மாதர் சங்க பொறுப்பாளர் ரஹ்மத் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பெண்கள் எலச்சிபாளையம் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி வந்தனர்.
ஒப்பாரி வைத்து போராட்டம்
பின்னர் பஸ் நிலையத்தில் கியாஸ் சிலிண்டரை சுற்றி ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பில் சமைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து சங்க மாநில துணை தலைவர் ராணி கூறுகையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.250 விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மானியமும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களுக்கு விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்றார்.
மாதர் சங்கத்தினரின் இந்த நூதன போராட்டம் காரணமாக நேற்று எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story