சேறும், சகதியுமான மண்சாலையை சீரமைத்த பொதுமக்கள்


சேறும், சகதியுமான மண்சாலையை சீரமைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Sep 2021 6:23 PM GMT (Updated: 5 Sep 2021 6:23 PM GMT)

ஓவேலி அருகே சேறும், சகதியுமான மண்சாலையை பொதுமக்கள் சீரமைத்தனர். அதனை தார்சாலையாக மாற்ற அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்

கூடலூர்

ஓவேலி அருகே சேறும், சகதியுமான மண்சாலையை பொதுமக்கள் சீரமைத்தனர். அதனை தார்சாலையாக மாற்ற அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழுதடைந்த சாலை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரோட்டுப்பாறையில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக எல்லமலைக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளனர். 

மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களிலும் பயணம் செய்ய முடிவதில்லை. எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் சட்டப்பிரிவு-17 வகை நிலம் என்பதால், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சாலை சீரமைப்பு

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தாமாக முன்வந்து சேறும், சகதியுமாக காணப்படும் அந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் தார்சாலை மிகவும் பழுதடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கேட்டால் சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் உள்ளதால் சாலையை சீரமைக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

தார்சாலையாக மாற்ற வேண்டும்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பருவமழை பெய்யும். இந்த காலகட்டங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

எனவே பொதுமக்கள் இணைந்து மிகவும் மோசமாக உள்ள இடங்களில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story