போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு: விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை? பரபரப்பு தகவல்கள்


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு: விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 5 Sept 2021 11:54 PM IST (Updated: 5 Sept 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்தவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது திடீரென பலியானார். அவர் ஏற்கனவே விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்:
வீடியோ எடுத்து மிரட்டல்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). இவர் மீது கடந்த மாதம் 16 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாக பரமத்திவேலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.
இதற்கிடையே மணிகண்டன் வீட்டில் முன்புறமாக பூட்டி விட்டு உள்ளே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை விசாரணைக்காக பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு சிறுநீர் கழிக்க சென்ற மணிகண்டன் மயங்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை
இதையடுத்து போலீசார் அவரை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் குழுவினர் மணிகண்டனை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது மணிகண்டன் இறந்ததால், அவரது இறப்பு குறித்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெயந்தியும் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவருடைய முன்னிலையில் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விஷ மாத்திரை சாப்பிட்டாரா?
பிரேத பரிசோதனையின் போது மணிகண்டனின் உடல் உறுப்புகள் சில நிறம் மாறி காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் விசாரணைக்கு பயந்து விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது அங்கு தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரைகளின் குப்பிகள் கிடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மணிகண்டனின் சாவுக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணைக்கு பயந்து மணிகண்டன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருவதால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story