பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.35 நிர்ணயிக்க வேண்டும்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, நீலகிரி விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
ஊட்டி
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.35 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, நீலகிரி விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
விலை குறைந்தது
நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு சிறு, குறு தேயிலை விவசாயிகள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பச்சை தேயிலை பறித்து வினியோகம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பச்சை தேயிலை கிலோ ரூ.24-க்கு மேல் விலை கிடைத்து வந்தது.
அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.15-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இதனால் மகசூல் அதிகரித்தும் உரிய விலை இல்லாததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கிலோவுக்கு ரூ.35
நீலகிரியில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு எங்களது குறைகளை கேட்க அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருந்தோம்.
பச்சை தேயிலை விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளித்தது. நீலகிரியில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.35 விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிப்படை டெண்டர்
இன்கோசர்வ் கட்டுப்பாட்டில் உள்ள 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. அதே சமயம் தொழிற்சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீனபடுத்துவதற்காக விடப்படும் டெண்டர் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
Related Tags :
Next Story