கறம்பக்குடி அருகே காவிரி கிளை வாய்க்காலில் உடைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசம்
காவிரி கிளை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி
காவிரி கிளை வாய்க்கால் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் உளவயல் கல்லணை கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் கறம்பக்குடி ஒன்றிய பகுதிக்கு காவிரி தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள பேயாடிபட்டி கிளை வாய்க்காலில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதிகளில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நாசமானது.
மணல் மூட்டைகள்
இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் வாண்டான்விடுதி கிராம நிர்வாகி அதிகாரி ரவி, கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு சென்ற தாசில்தார் இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டம், வெட்டிக்காடு கல்லணை கால்வாய் பாசன பிரிவு உதவி பொறியாளர் மதியழகன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டி எடுத்து அடைப்பை சரி செய்ய முயன்றனர். இருப்பினும் உடைப்பை சரிசெய்ய இயலவில்லை. இதைதொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உதவியுடன் 8 மணிநேர போராட்டத்திற்கு பின் மணல் மூட்டைகளை அடுக்கி வாய்க்கால் உடைப்பு சரிசெய்யப்பட்டது.
கரைகளை பலப்படுத்த வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டும் இதே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள காவிரி கிளை வாய்க்கால் கரைகளை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story