சுயேச்சை எம்.எல்.ஏ.விடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் கைது
ரியல் எஸ்டேட் செய்வதாக கூறி அங்காளன் எம்.எல்.ஏ.விடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, செப்.6-
ரியல் எஸ்டேட் செய்வதாக கூறி அங்காளன் எம்.எல்.ஏ.விடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
ரூ.15 லட்சம் மோசடி
புதுச்சேரி திருபுவனை தனி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அங்காளன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ரவி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரவி தான் ரியல் எஸ்டேட் (நில வணிகம்) செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார். அவரது பேச்சில் மயங்கிய அங்காளன் எம்.எல்.ஏ. ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய முன் வந்தார்.
இதற்காக ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ரவியின் அலுவலகத்திற்கு சென்று அவரையும், உதவியாளர் சோமுவையும் சந்தித்து முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தை வழங்கினார்.
கைது
அப்போது அவர்கள், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை பரிக்கல் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு உடன்படிக்கை செய்ததாக பத்திரத்தை தயார் செய்து அங்காளன் எம்.எல்.ஏ.விடம் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த இடத்தின் உரிமையாளரிடம் கையெழுத்து பெற்று அதன் நகலை தருவதாக உறுதி கூறினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி கையெழுத்து பெற்று கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்காளன் எம்.எல்.ஏ. இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை வலைவீசி தேடி வந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story