சாலையோர கடையில் தலையாட்டி பொம்மைகள் திருட்டு
தஞ்சை பெரியகோவில் அருகே சாலையோர கடையில் தலையாட்டி பொம்மைகளை உடைத்த நபர் தான் திருடிய பொம்மைகளை சாக்குகளில் கட்டி அள்ளி சென்றார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் அருகே சாலையோர கடையில் தலையாட்டி பொம்மைகளை உடைத்த நபர் தான் திருடிய பொம்மைகளை சாக்குகளில் கட்டி அள்ளி சென்றார்.
தலையாட்டி பொம்மைகள் உடைப்பு
தஞ்சை பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தஞ்சை பெரியகோவில் அருகே சோழன்சிலை பஸ் நிறுத்தத்தில் சாலையோரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் உள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு வியாபாரம் முடிந்தவுடன் பொம்மைகளை தார்பாய் மூலம் நன்கு மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர், ஜெயக்குமாரின் பொம்மைகடையில் இருந்த தலையாட்டி பொம்மைகளை எடுத்து கீழே போட்டு காலால் உடைத்துவிட்டு 2 சிறிய சாக்கு மூட்டைகளில் தலையாட்டி பொம்மைகளை திருடிச் சென்றுவிட்டார்.
போலீசார் விசாரணை
ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தலையாட்டி பொம்மைகளை காவிரி சிறப்பங்காடி அருகே உள்ள குப்பை கிடங்கு உள்ள இடத்தில் வீசிவிட்டு, ஒரு சாக்கு மூட்டையில் இருந்த பொம்மைகளை அந்த நபர் திருடிச் சென்றுவிட்டார்.
நேற்றுகாலை கடையை திறப்பதற்காக வந்த ஜெயக்குமார் தலையாட்டி பொம்மைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அவர், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
மேலும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சைக்கிளில் வரக்கூடிய ஒரு நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் தெற்குஅலங்கம் வழியாக சைக்கிளில் செல்வது தெரியவருகிறது. இதையடுத்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சைக்கிளில் வந்து சென்றவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொம்மைகளின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
Related Tags :
Next Story