டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார்சைக்கிள் சிக்கியது வாலிபர் சாவு


டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார்சைக்கிள் சிக்கியது வாலிபர் சாவு
x
தினத்தந்தி 5 Sep 2021 8:03 PM GMT (Updated: 2021-09-06T01:33:55+05:30)

பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடு்வில் மோட்டார்சைக்கிள் சிக்கியதில் ஒரத்தநாட்டை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வல்லம்:
பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடு்வில் மோட்டார்சைக்கிள் சிக்கியதில் ஒரத்தநாட்டை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
பராமரிப்பு பணிகள் 
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலைபோடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை பாலத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். 
அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் பாலத்தில் வேகமாக வந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிராக்டர்களுக்கு நடுவே சென்றுள்ளார். 
வாலிபர் சாவு 
அப்போது இரண்டு டிராக்டர்களின் பின் டயர்களுக்கு நடுவில் மோட்டார்சைக்கிளுடன் அவர் சிக்கி கொண்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில்,  விபத்தில் பலியான வாலிபர் ஒரத்தநாடு அருகே உள்ள பானம்புத்தூர்குடிகாடு பகுதியை சேர்ந்த வீரராகவன் (வயது 36) என்பதும், அவர் தற்போது வெளிநாட்டில் இருந்து வந்து ஊரில் விவசாயம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. 
விசாரணை 
பின்னர்  விபத்தில் பலியான வீரராகவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த வீரராகவனின அண்ணன் விஜயராகவன் (37) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story