பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் 2 பேர் கைது


பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 2:16 AM IST (Updated: 6 Sept 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர்.

நகை பறிப்பு

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியை சேர்ந்த குருசாமி மனைவி சுசீலா. கடந்த 24.1.2021 அன்று வடக்குரத வீதி வழியாக பேன்ஸி கடையில் உள்ள மகன்களை மதிய உணவு சாப்பாட்டுக்கு மாற்றி விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு ஜாகீர்உசேன், இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளையர்கள் கைது

இந்நிலையில் நேற்று காலை தனிப்படை போலீசார் சுரண்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் சாம்பவர் வடகரையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மது (வயது 24), அல்லாபிச்சை மகன் காஜாமைதீன் (23) என்பதும், சுசீலாவிடம் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் வேறு ஏதும் குற்ற வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story