விஜயாப்புரா, பாகல்கோட்டையில் திடீர் நிலநடுக்கம்
மராட்டிய எல்லையில் அமைந்து உள்ள பாகல்கோட்டை, விஜயாப்புரா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலநடுக்கம் உண்டானது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
பெங்களூரு:
திடீர் நிலநடுக்கம்
கர்நாடக-மராட்டிய மாநிலங்களின் எல்லையில் விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூர், விஜயாப்புரா டவுன், பசவனபாகேவாடி, திக்கோட்டா, இண்டி, சிந்தகி ஆகிய பகுதிகளிலும், பாகல்கோட்டை மாவட்டத்தில் வித்யகிரி, ஷரதலா, அங்கலகி ஆகிய பகுதிகளிலும் திடீரென நிலநடுக்கம் உண்டானது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வீடுகள் குலுங்கின.
இதனால் அந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் அலறி அடித்து கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர். மேலும் வீடுகளில் இருந்த பாத்திரங்களும் உருண்டோடின. இதுபற்றி அறிந்த கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறும்போது:-
சேதம் இல்லை
கர்நாடக-மராட்டிய மாநில எல்லையில் உள்ள கோலாப்பூரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியில் இருந்து 12 மணிக்குள் திடீரென நிலநடுக்கம் உண்டானது. 3.9 ஆக ரிக்டேர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கோலாப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பாகல்கோட்டை, விஜயாப்புராவிலும் நிலடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றனர். திடீர் நிலநடுக்கத்தால் விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story