பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட ரூ.6½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்- டிரைவர்- கிளீனர் கைது


பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட ரூ.6½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்- டிரைவர்- கிளீனர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 2:39 AM IST (Updated: 6 Sept 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.6½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர்:
பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.6½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓமலூர் வழியாக தூத்துக்குடிக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் நேரடி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ராஜப்பன், அப்துல் அஜிஸ், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் ஆர்.சி. செட்டிப்பட்டி பிரிவு ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டிரைவர்- கிளீனர்
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியை ஆய்வு செய்த போது, அதன் மேற்பகுதியில் கம்பளி இருந்தது. அந்த கம்பளிக்கு கீழே ஏராளமான மூட்டைகள் இருந்தன. அதனை போலீசார் சோதனையிட்ட போது, அந்த மூட்டைகளில் புகையிலை பொருட்கள் எனப்படும் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் முகமது அப்துல் சலீம் (வயது 29) என்பதும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர், பெங்களூருவில் வாஷிங் மெஷின் நிறுவனத்தில் தற்காலிக டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவருடன் கிளீனராக இருந்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் (29) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை ஒருவர் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு சென்று, அங்கு இறக்கி விட்டு வரவும் கூறியதாக தெரிகிறது. லாரியில் இருந்த 40 மூட்டை பான் மசாலா பொருட்கள் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பு இருக்கும் எனவும், மேலும் 5 மூட்டை குட்கா பொருட்கள் ரூ.1¾ லட்சம் மதிப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் முகமது அப்துல் சலீம், கிளீனர் திலீப் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், அந்த புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இருப்பினும் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கொடுத்து அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story