சேலம் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது- கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


சேலம்  மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது- கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sept 2021 2:48 AM IST (Updated: 6 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 13 ஆசிரியர்களுக்கு அவர்களை கவுரவிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி பேசினார்.
அப்போது கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
நல்லாசிரியர்
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும்.
வகுப்பறையில் கடைகோடியில் இருக்கும் மாணவனை கண்டறிந்து அவனுக்கும் சிறப்பான முறையில் பாடங்களை கற்றுக்கொடுத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும். பள்ளியில் குழந்தை நேயத்துடன் நடந்து கொள்ளும் பண்பு. அனைத்து மாணவர்களையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை கொண்டவரே நல்ல ஆசிரியர் ஆவார்.
அர்ப்பணிப்பு உணர்வோடு
சேலம் மாவட்டத்தில் நான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தேன். அதன்பிறகு பல்வேறு உயர் பதவிகளுக்கு சென்று தற்போது மீண்டும் சேலம் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளேன். கொரோனா காலத்திலும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். 
மேலும், கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ரூ.1 கோடியே 70 லட்சம் நிதியை வழங்கினார்கள். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி மையங்களில் மருத்துவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
13 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 13 லட்சம் பேருக்கு (அதாவது 45 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு கலெக்டர்கார்மேகம் பேசினார்.
ஆசிரியர்கள் பட்டியல்
பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமேஷ், தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரவிக்குமார், செட்டிச்சாவடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், கொங்குபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாஸ்கர், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆறுமுகம், வாழப்பாடி காலனி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, வாழப்பாடி காளியம்மன்புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், அரிசிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன், காடையாம்பட்டி நடுப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, கன்னங்குறிச்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி, கெங்கவல்லி ஓடைக்காட்டுப்புதூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஆசிரியை சத்யா, சேலம் குளூனி மெட்ரிக் பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஆகிய 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான பாராட்டு சான்றிதழ், வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

Next Story