மேட்டூர் அணையின் பண்ணவாடியில் வெளியே தெரிந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் வெளியே தெரிந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது.
கொளத்தூர்:
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் வெளியே தெரிந்த கிறிஸ்தவ கோபுரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பண்ணவாடி, கோட்டையூர், காவேரிபுரம், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இருந்தன. இந்த நிலையில் மேட்டூர் அணையின் கட்டுமான பணிகள் தொடங்கிய போது இந்த கிராமங்களில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் குடிபுகுந்தனர்.
அப்போது அவர்கள் தாங்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை, ராஜா கோட்டை, கிறிஸ்தவ கோபுரம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு வெளியேறினர். பின்பு மேட்டூர் அணை கட்டப்பட்டு குடியிருப்பு பகுதிகள் அப்படியே நீர்த்தேக்க பகுதிகளுக்குள் மூழ்கின.
சுற்றுலாத்தலமானது
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருக்கும் போது தண்ணீரில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிவது வழக்கம். அதேபோல அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளபோது நந்தி சிலை வெளியே தெரிவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் இந்த புராதன சின்னங்களான கிறிஸ்தவ கோபுரமும், நந்தி சிலையும் வெளியே தெரிந்தன.
இந்த புராதன நினைவு சின்னங்களை பார்வையிடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து போனதால் பண்ணவாடி பரிசல் துறை ஒரு சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
மீண்டும் மூழ்கிய கிறிஸ்தவ கோபுரம்
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் இருந்த நந்தி சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கியது.
அதேபோல கிறிஸ்தவ கோபுரமும் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவது காவிரி டெல்டா மாவட்ட பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story