பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது


பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 12:44 PM IST (Updated: 6 Sept 2021 12:44 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சமையல் எண்ணெய், துவரம்பருப்பு உட்பட பல்வேறு மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடைகள் மூலம் ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு சரியாக வழங்கப்படாமல் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு மினி லாரி ஒன்றில் ஏற்றி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல உள்ளதாக தமிழ்நாடு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் சென்னை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

2 பேர் கைது

அப்போது ஆலாடு கிராமத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை மினி லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் கடத்தி சென்றபோது, போலீசார் மடக்கி பிடித்தனர்.

அந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 100 மூட்டைகளில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட பொன்னேரி தடப்பெரும்பாக்கத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 61), மெதூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story