தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது
தூத்துக்குடி:
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை.
ஆனாலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு வந்தனர். நேற்று முதல் குறைதீர்க்கும் நாள் தொடங்கப்படவில்லையென்றாலும், மனுக்கள் பிரிவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றனர். இதனால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை...
தூத்துக்குடி அருகே உள்ள சாமிநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். நாங்கள் பெரும்பாலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால், நாங்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அங்கேயும் எங்களுக்கு போதுமான ஊதியம் கிடைக்காததால் நாங்கள் வறுமையில் வாடும் நிலையில் உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஏற்கனவே எங்கள் கிராமத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாதம்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
ஆழ்வார்திருநகரி நவலட்சுமி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘நாங்கள் நவலட்சுமி கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் விளையாடுவதற்காக எங்கள் கிராமத்தில் உள்ள சந்தையில் இடம் ஒதுக்கி இருந்தார்கள். அதனை பயன்படுத்தி வந்த நிலையில் சிலர் விளையாட எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுத்து உள்ளனர். ஆகையால் எங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியார்கள் சங்கத்தினர் மாநில துணைத்தலைவர் நெப்போலியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் அதிகாரியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், உயர் அதிகாரிகளின் ஆணையை மீறி செயல்பட்டு வரும் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிமெண்டு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சி மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், ‘ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.கைலாசபுரம் பகுதியில் சிமெண்டு தொழிற்சாலை அமைய உள்ள இடத்தின் அருகே கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்து உள்ளது. இந்த நீரேற்று நிலையம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த பகுதியில் தொழிற்சாலை அமைவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் அந்த பகுதியில் சிமெண்டு தொழிற்சாலை அமைக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அருணாதேவி கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. ஆனால் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சிலை கரைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர். ஆகையால் அரசு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூரில் 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பேத்கர் நினைவு பூங்காவில் தமிழக அரசு செலவில் அம்பேத்கரின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்ற தொடரில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சாதி சான்றிதழ்
சிவபாரத இந்து மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியன் கொடுத்த மனுவில், ‘தமிழக முதல்-அமைச்சர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், மக்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது என்று அறிவித்து உள்ளார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டில் சாதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டால் அனைவரும் சமமாக கருதப்படுவார்கள். அது மட்டுமின்றி வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி தனசேகரன் நகர் கிளை இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் சிறியபுஷ்பம், மாவட்ட செயலாளர் பூமயில் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகராட்சி தனசேகரன்நகர் 5, 6-வது தெருவில் 125 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி மிகவும் அவதிப்படுகிறோம். ஆகையால் எங்கள் பகுதியில் சாலை வசதி, வாறுகால் வசதி உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
வீட்டுமனை பட்டா
தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி செயலாளர் சேகர் தலைமையில் ெகாடுத்த மனுவில், ‘நாங்கள் புதூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பயனாளிகள் அனைவரும் மிகுந்த ஏழை என்பதால், வீடு கட்டமுடியவில்லை. ஆகையால் அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story