ஊட்டச்சத்து வார விழா கண்காட்சி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து வார விழா கண்காட்சியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
திருப்பூர், செப்.7-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து வார விழா கண்காட்சியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய உணவு திருவிழா
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வார விழா கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 1512 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 1381 அங்கன்வாடி பணியாளர்களும் 1255 உதவியாளர்களும் பணிபுரிகிறார்கள். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது.
சத்தான உணவு
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிதல், வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல் என்ற இரு உயரிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதே முக்கிய நோக்கம். இதனால் 10407 கர்ப்பிணிகள் 8972 பாலூட்டும் தாய்மார்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 715 குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். சத்தான உணவு, சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் தவறாமல் உண்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story