விவசாய மின் மோட்டார் பொருத்த மானியம்
சூரிய மின்நிலையத்துடன் விவசாய மின் மோட்டோர் மானியத்தொகையுடன் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
திருப்பூர்
சூரிய மின்நிலையத்துடன் விவசாய மின் மோட்டோர் மானியத்தொகையுடன் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
மின்மோட்டார்
பிரதம மந்திரி கிஷான் ஊர்ஜா சுரக்ஷா இவாம் உட்டான் மகாபியன் யோஜனா திட்டத்தின் கீழ் 7.5 எச்.பி. வரை திறன் கொண்ட மோட்டார்களுக்கு மத்திய அரசு மானியம் 30 சதவீதம், மாநில அரசு மானியம் 30 சதவீதம் என மொத்தம் 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 40 சதவீதத்தில் 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பு போக மீதம் உள்ள தொகைக்கு வங்கிக்கடனுதவி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இலவச மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டார்களுக்கு சூரிய மின் நிலையம் அமைக்க முன்வந்துள்ளது. இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிப்பட மாட்டாது. இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படாது.
சோலார் பேனல்
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 11 கிலோவாட் திறன் சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் வருடத்துக்கு 14 ஆயிரத்து 850 யூனிட் மின்உற்பத்தி பெறலாம். சூரியமின் சக்தியின் உற்பத்திக்கு அரசு கொடுக்கும் தொகை யூனிட்டுக்கு ரூ.2.28. இதன் மூலம் வருடத்துக்கு விவசாயிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 858 வருமானம் கிடைக்கும். மின்வாரிய மின் கட்டமைப்புக்கு செலுத்தப்பட்ட மின் ஆற்றலின் அளவுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை யூனிட்டுக்கு 50 பைசா ஆகும். ஒரு வருடத்தில் விவசாயி இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை மூலம் கிடைக்கப்பெறுகின்ற வருமானம் ரூ.3 ஆயிரத்து 750 ஆகும். ஒரு வருடத்தில் ஒரு விவசாயி ரூ.40 ஆயிரம் வருமானம் பெறலாம்.
சூரிய ஒளி மின்உற்பத்தி சாதனம் முழுமையாக பயன்தரும் காலம் 25ஆண்டுகள் ஆகும். 11 கிலோவாட் சூரிய மின்சக்தி சாதனத்தை அமைப்பதற்கான செலவுத்தொகை ரூ.5 லட்சம். இதில் மத்திய அரசு 30 சதவீத மானியமும், மாநில அரசு 30 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பெறும் பயன்கள் தடையில்லா மும்முனை மின்சாரம் பெற முடியும். அடிக்கடி பழுதடையும் மின்மோட்டார் செலவு குறைக்கப்படும். 5 வருட இலவச பராமரிப்பு செய்யப்படும்.
விண்ணப்பிக்கலாம்
மானியம் பெற தகுதியுடைய விவசாயிகள் அதிகபட்சமாக 7.5 எச்.பி. திறன் வரை உள்ள இலவச மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டார்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 3வது தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவி பொறியாளரை 93852 90534 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story