கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
ஊத்துக்குளி அருகே 11 கல் குவாரிகளுக்கு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
ஊத்துக்குளி அருகே 11 கல் குவாரிகளுக்கு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சிவகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு கலெக்டர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வதி உள்ளிட்டவை தொடர்பாக நேற்று 785 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கருத்துக்கேட்பு கூட்டம் ரத்து
ஊத்துக்குளி செம்பவள்ளம், மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிதாக அமைக்க இருக்கும் 11 கல்குவாரிகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு புறம்பாக இந்த கூட்டம் நடந்துள்ளதால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 11 கல்குவாரிகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒரே அறிக்கையாக கொடுக்கப்பட்டு உள்ளது. கல்குவாரிகளுக்கு இடையே இடைவெளி இருப்பதால் தனித்தனியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை கொடுக்க வேண்டும். தவறான விவரங்களுடன் நடந்துள்ள கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கல் குவாரியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் கைத்தமலை முருகன் கோவில் உள்ள மலை வனத்துறையின் காப்புக்காடுகளாக உள்ளது. பெரியபாளையம் கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னம் ஆகும். ஊத்துக்குளி தாலுகாவில் இயங்கி வரும் 64 கல்குவாரிகளும், ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் நேரில் வந்து ஆய்வு செய்து, விதிமீறி இயங்கிய கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். எனவே 11 கல்குவாரிகளின் கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாலாஜி அளித்த மனுவில், ‘விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 500 சிலைகளை கோவில், வியாபார கடைகள், வீடுகளுக்கு அருகில் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எனவே வருகிற 10ந் தேதி நடக்க இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதியும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், ‘திருப்பூர் மாநகராட்சி 3வது வார்டு ஒட்டபாளையம் பகுதியில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், 3வது வார்டு பகுதியில் வசிக்கும் வீட்டில்லாதவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பூமலூர் அருகே பள்ளிபாளையத்தை சேர்ந்த பொன்னம்மாள் வயது 66 என்ற மூதாட்டி அளித்த மனுவில், ‘எனது பெரிய மகன் என்னை ஏமாற்றி எனது சொத்தில் ஒரு பகுதியை எழுதி வாங்கிக்கொண்டு தற்போது எனக்கு பாத்தியப்பட்ட மீதம் உள்ள சொத்துக்கு ஆசைப்பட்டு என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
-
Related Tags :
Next Story