பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ரூ.20 ஆயிரம் மோசடி
செங்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவிசெய்வது போன்று மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை
செங்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவிசெய்வது போன்று மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி ஏ.டி.எம். கார்டு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா (வயது 34).
இவர் கடந்த 1-ந் தேதி தனது தந்தையின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக செங்கத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
அங்கு பணம் இல்லாததால் அருகில் இருந்த தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று உள்ளார்.
அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவருக்கு உதவுவதாக கூறி கார்டு மற்றும் ரகசிய எண்ணை வாங்கி எந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் நடித்து பணம் இல்லை எனக்கூறி, தான் ஏற்கனவே வைத்திருந்த வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
ரூ.20 ஆயிரம் மோசடி
இதை கவனிக்காத கோகிலதீபா அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் 2 முறை தலா ரூ.9 ஆயிரத்து 500 எடுத்தது போன்றும், ஒரு முறை ரூ.1000 எடுத்தது போன்றும் அவருடைய தந்தையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது. இதை அறிந்த கோகிலதீபா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்த போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவிய வாலிபர் உண்மையான ஏ.டி.எம். கார்டை வைத்து கொண்டு போலி கார்டை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து அவர் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் செங்கத்தில் தனியார் பள்ளியின் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் அவர், கீழ்பென்னாத்தூர் தாலுகா எரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் நவீன்குமார் (27) என்பதும், கோகிலாதீபாவிடம் போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் இதேபோன்று ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்கு உதவி செய்வது போல் ஏமாற்றியதற்காக கடந்த 2019-ம் ஆண்டு 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தது தெரியவந்தது.
ஜாமீனில் வந்த அவர் திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 100 மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story