முகநூலில் பழகிய மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்


முகநூலில் பழகிய மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 6 Sept 2021 6:57 PM IST (Updated: 6 Sept 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் முகநூலில் பழகிய மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வேலூர்

வேலூரில் முகநூலில் பழகிய மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பள்ளி மாணவி கடத்தல்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ் 2 மாணவி. கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின்பு திரும்பி வரவில்லை.

 அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் மாணவிக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மேல்பட்டியை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனர் கவுதம் (வயது 21) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்துள்ளனர். கவுதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பெங்களூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

ஆம்னி பஸ் கிளீனர் கைது

இந்த நிலையில் நேற்று  மாலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கவுதம், மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், கவுதம் பெங்களூருவுக்கு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கவுதமை கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story