கே.வி.குப்பம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி


கே.வி.குப்பம் அருகே  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2021 7:10 PM IST (Updated: 6 Sept 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பலியானார்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
விபத்து

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கநேரியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர், மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வாந்தார். இவர் நேற்று வீட்டில் இருந்து காட்பாடி ரோடு சென்னங்குப்பம் பஸ் நிறுத்தம் வழியாக குடியாத்தத்தை நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அந்த வழியாக எதிரே தக்காளி பாரம் ஏற்றி வந்த ஒரு சரக்கு ஆட்டோ திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சரக்கு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் தாசில்தார் ராஜேஸ்வரி, குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தில் கார்த்திகேயன் பலியான தகவலை கேள்விப்பட்டதும் மனைவி விஜயலட்சுமி சம்பவ இடத்துக்கு ஓடி வந்து, கணவரின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது துடித்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு சசிதரன் (22), லோகேஷ் (20) என்ற மகன்களும், வினோதினி (16) என்ற மகளும் உள்ளனர்.

Next Story