கள்ளக்குறிச்சி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:02 PM IST (Updated: 6 Sept 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


கள்ளக்குறிச்சி

தெருவில் தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் மோகூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் மலேரியா, யானைக்கால் மற்றும் வைரஸ் காய்ச்சல், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும், தெருக்களின் இருபுறமும் வடிகால் வசதி செய்து தர வேண்டும், மயானத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மோகூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் இடையே சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவத்தால் மோகூர் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story