கடலூரில் காசநோய் கண்டறிய நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடலூரில் காசநோய் கண்டறிய நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியப்பட உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, ஒரையூர், மருங்கூர், வடலூர், மங்களம்பேட்டை, நல்லூர், மங்களூர், கம்மாபுரம், ஒரத்தூர், ஆயக்குடி, சிவக்கம், கிருஷ்ணாபுரம், புதுச்சத்திரம் ஆகிய வட்டார மருத்துவமனைகளில் வருகிற 30-ந் தேதி வரை எக்ஸ்-ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற உள்ளது.
நடமாடும் வாகனம்
இதையொட்டி தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதையடுத்து கலெக்டர் கூறுகையில், தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் சளி பரிசோதனை, எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் இலவசம்
காசநோய் கண்டறியப்பட்டால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காசநோய் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் சிகிச்சை காலம் முடியும்வரை ஆறு மாதத்திற்கு உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்படும் என்றார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் “காசநோயை கண்டுபிடிப்போம், குணப்படுத்துவோம், ஒன்றிணைந்து அகற்றுவோம்” என்றும், வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், கடலூர் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story