புதிதாக நியமனம் செய்யப்பட்ட பணிதள பொறுப்பாளரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


புதிதாக நியமனம் செய்யப்பட்ட பணிதள பொறுப்பாளரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:29 PM IST (Updated: 6 Sept 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு

அரசூர், 
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாதம்பட்டு ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்த இளவரசன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அம்புரோஸ் என்பவர் பணிதள பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் மாதம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 4, 5, 6 ஆகிய 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் புதிய பணி தள பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அம்புரோஸ்  முறைகேடாக தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை திட்ட பணிகளை கொடுப்பதை கண்டித்தும், இளவரசனை மீண்டும் பணிதள பொறுப்பாளராக நியமிக்க கோரி கோஷம் எழுப்பியபடி ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சையத்முகமது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story