பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் ஊட்டச்சத்து விழாவில் கலெக்டர் மோகன் அறிவுரை


பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் ஊட்டச்சத்து விழாவில் கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 6 Sept 2021 10:32 PM IST (Updated: 6 Sept 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று ஊட்டச்சத்து மாத விழாவில் கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

ஊட்டச்சத்து கண்காட்சி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கான ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பின் கீழ் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கன்வாடி மையங்களின் பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள், வாழ்க்கை சுழற்சி முறையில் ஊட்டச்சத்துவின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவில் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம், சிறுதானியங்களில் செய்யப்படும் உணவு வகைகளின் செயல்முறை விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உடல் மெலிவுற்ற 5 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

அறிவுரை

அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் டி.மோகன் பேசுகையில், ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுவதின் நோக்கம் வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1,000 நாட்கள் ரத்தசோகை, முறையான கை கழுவுதல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தை கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து வழங்கி ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்தை ஒவ்வொரு வருடமும் 2 சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து மாதத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைக்க முன்வர வேண்டும். எளிய உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை செய்யலாம். பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலமும், ஊட்டச்சத்து மிக்க உணவுமுறைகளை கடைபிடிப்பதன் மூலமும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story