சின்னசேலம் அருகே ஆட்டோ லாரி மோதல் மனைவியுடன் வியாபாரி பலி


சின்னசேலம் அருகே ஆட்டோ லாரி மோதல் மனைவியுடன் வியாபாரி பலி
x
தினத்தந்தி 6 Sept 2021 10:50 PM IST (Updated: 6 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி அவரது மனைவியுடன் பரிதாபமாக இறந்தார்

சின்னசேலம்

காய்கறி வியாபாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 51). காய்கறி வியாபாரியான இவர் தினமும் ஆட்டோவில் சேலம் மாவட்டம், தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.
வழக்கம்போல் பெரியசாமி நேற்று காலை 6.30 மணியளவில் விளம்பாவூரில் இருந்து மனைவி சரஸ்வதியை(46) அழைத்துக்கொண்டு ஆட்டோவில் தலைவாசல் நோக்கி புறப்பட்டார். 

லாரி மோதியது

சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையம் அருகே வந்த போது கரூரில் இருந்து மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி, பெரியசாமி ஓட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த அவரது மனைவி சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். 

டிரைவர் கைது

இது குறித்து பெரியசாமியின் மகன் அஜித்குமார்(26) கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மணி மகன் வெங்கடேசன்(27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சந்தைக்கு காய்கறி வாங்க சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பலியான சம்பவம் விளம்பாவூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story