புதுக்கோட்டையில் அரசு பள்ளியின் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சேதம் ஆசிரியர்கள் அதிர்ச்சி


புதுக்கோட்டையில் அரசு பள்ளியின் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சேதம் ஆசிரியர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 7 Sept 2021 12:05 AM IST (Updated: 7 Sept 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அரசு பள்ளியின் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை
அரசு பள்ளி
சென்னையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் ஒன்றும் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், சேதமடைந்துள்ளதும், கட்டிட தரம் குறைபாட்டாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- 
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் இந்த பள்ளியும் திறக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து செல்கின்றனர்.
2 வகுப்பறைகள்
இந்த நிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதலாக வகுப்பறைகள் கட்டும் பணி கடந்த ஆண்டு (2020) தொடங்கி நடைபெற்றது. இதில் ஏற்கனவே 2 வகுப்பறைகள் கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல் பகுதியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த 2 வகுப்பறைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டன. 
இந்த நிலையில் கட்டிடத்தில் கட்டுமான பணியின் தரம் குறைவாக இருந்துள்ளது. இதனால் வகுப்பறையின் சுவரில் கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் தற்போது பெய்த மழையில் சுவரில் மழைநீர் இறங்கி ஒரு வகுப்பறையின் சுவர் பொதும்பி காணப்படுகிறது. இதேபோல ஒரு வகுப்பறையில் கரும்பலகையிலும் சேதம் ஏற்பட்டிருந்தது. கட்டிடத்தின் மேல் ஒருபகுதியிலும் விரிசலும் இருந்தது. இதனை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கலெக்டரிடம் புகார்
பள்ளி திறந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைபாடாக இருந்தது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பள்ளி தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எம்.பி. அப்துல்லா நேற்று இந்த கட்டிடத்தை பார்வையிட்டு, கலெக்டர் கவிதாராமுவிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கூறினார். பள்ளி தரப்பினர் கூறுகையில், ``புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகளும் முறையாக கட்டப்படப்படவில்லை. கட்டிட ஒப்பந்ததாரர் இந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை முழுமையாக செலவு செய்யவில்லை. கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. 
மாணவ-மாணவிகள் மாடியில் இருந்து கீழே விழாமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். அதனையும் அமைக்கவில்லை. பள்ளி திறப்பதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டும். இதேபோல ஒரு கட்டிடத்தில் 2 வகுப்பறைகளுக்கு இடையேயான சுவர் தரையில் 2 அடி திடீரென இறங்கி உள்ளது. மேல் தளத்தில் ஒட்டாமல் இடைவெளி காணப்படுகிறது. இதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Next Story