மோகனூரில் பயங்கரம்:கல்லால் தாக்கி மூதாட்டி கொலை-பக்கத்து வீட்டுக்காரர் கைது


மோகனூரில் பயங்கரம்:கல்லால் தாக்கி மூதாட்டி கொலை-பக்கத்து வீட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2021 12:14 AM IST (Updated: 7 Sept 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

மோகனூரில் கல்லால் தாக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக அவருடைய பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர்:
மூதாட்டி கொலை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் நேருநகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி மாராயி (வயது 92). இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் மாராயி அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை மூதாட்டி மாராயி வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய பேரன் கணேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாராயி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
இந்த பயங்கர சம்பவம் குறித்து கணேசன் மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், செல்லபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாராயி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் சேர்ந்த பெயிண்டரான காளிதாஸ் (25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
கல்லால் தாக்கி கொலை
எங்களது பகுதியில் 3 வீடுகள் வரிசையாக உள்ளன. இதில் நானும், மூதாட்டி மாராயியும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வந்தோம். ஒரு வீடு காலியாக உள்ளது. 3 வீடுகளின் இடையேயும் தடுப்புக்காக அட்டை வைக்கப்பட்டுள்ளது. மாராயியிடம் அதிகளவு பணம், நகை இருப்பதாக எண்ணி, அதை திருடுவதற்கு நான் திட்டம் போட்டேன். 
அதன்படி நேற்று முன்தினம் இரவு காலியாக இருந்த வீட்டுக்குள் சென்றேன். பின்னர் அந்த வீட்டின் அட்டை தடுப்பை அகற்றி மாராயி வீட்டில் திருட முயன்றேன். அப்போது அவர் விழித்து கொண்டதால் அவரை கல்லால் தாக்கினேன். மேலும் அங்கிருந்த துண்டால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் வீட்டில் தேடி பார்த்தபோது அங்கு நகை, பணம் எதுவுமில்லை. இதையடுத்து நான் எனது வீட்டுக்கு சென்று தூங்கினேன்.
பரபரப்பு
பின்னர் மறுநாள் காலையில் எதுவும் தெரியாதது போல், மாராயி பேரன் கணேசனுக்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.
நகை, பணத்துக்காக பக்கத்து வீட்டுக்காரரே 92 வயது மூதாட்டியை கல்லால் தாக்கியும், கழுத்தை இறுக்கியும் பயங்கரமாக கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story